திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.39 திருவேட்களம்
பண் - தக்கராகம்
அந்தமும் ஆதியு மாகிய வண்ணல்
    ஆரழ லங்கை அமர்ந்திலங்க
மந்த முழவம் இயம்ப
    மலைமகள் காண நின்றாடிச்
சந்த மிலங்கு நகுதலை கங்கை
    தண்மதியம் மயலே ததும்ப
வெந்தவெண் ணீறு மெய்பூசும்
    வேட்கள நன்னக ராரே.
1
சடைதனைத் தாழ்தலும் ஏற முடித்துச்
    சங்கவெண் டோடு சரிந்திலங்கப்
புடைதனிற் பாரிடஞ் சூழப்
    போதரு மாறிவர் போல்வார்
உடைதனில் நால்விரற் கோவண ஆடை
    உண்பது மூரிடு பிச்சைவெள்ளை
விடைதனை ஊர்தி நயந்தார்
    வேட்கள நன்னக ராரே.
2
பூதமும் பல்கண மும்புடை சூழப்
    பூமியும் விண்ணும் உடன்பொருந்தச்
சீதமும் வெம்மையு மாகிச்
    சீரொடு நின்றவெஞ் செல்வர்
ஓதமுங் கானலுஞ் சூழ்தரு வேலை
    உள்ளங் கலந்திசை யாலெழுந்த
வேதமும் வேள்வியும் ஓவா
    வேட்கள நன்னக ராரே.
3
அரைபுல்கும் ஐந்தலை யாட லரவம்
    அமையவெண் கோவணத் தோடசைத்து
வரைபுல்கு மார்பி லோராமை
    வாங்கி யணிந் தவர்தாந்
திரைபுல்கு தெண்கடல் தண்கழி யோதந்
    தேனலங் கானலில் வண்டுபண்செய்ய
விரைபுல்கு பைம்பொழில் சூழ்ந்த
    வேட்கள நன்னக ராரே.
4
பண்ணுறு வண்டறை கொன்றை யலங்கல்
    பால்புரை நீறுவெண் ணூல்கிடந்த
பெண்ணுறு மார்பினர் பேணார்
    மும்மதில் எய்த பெருமான்
கண்ணுறு நெற்றி கலந்த வெண்திங்கட்
    கண்ணியர் விண்ணவர் கைதொழுதேத்தும்
வெண்ணிற மால்விடை அண்ணல்
    வேட்கள நன்னக ராரே.
5
கறிவளர் குன்ற மெடுத்தவன் காதற்
    கண்கல ரைங்கணை யோனுடலம்
பொறிவளர் ஆரழ லுண்ணப்
    பொங்கிய பூத புராணர்
மறிவள ரங்கையர் மங்கையொர் பங்கர்
    மைஞ்ஞிற மானுரி தோலுடையாடை
வெறிவளர் கொன்றையந் தாரார்
    வேட்கள நன்னக ராரே.
6
மண்பொடிக் கொண்டெரித் தோர் சுடலை
    மாமலை வேந்தன் மகள்மகிழ
நுண்பொடிச் சேர நின்றாடி
    நொய்யன செய்யல் உகந்தார்
கண்பொடி வெண்டலை யோடுகை யேந்திக்
    காலனைக் காலாற் கடிந்துகந்தார்
வெண்பொடிச் சேர்திரு மார்பர்
    வேட்கள நன்னக ராரே.
7
ஆழ்தரு மால்கடல் நஞ்சினை யுண்டார்
    அமுத மமரர்க் கருளி
சூழ்தரு பாம்பரை யார்த்துச்
    சூலமோ டொண்மழு வேந்தித்
தாழ்தரு புன்சடை யொன்றினை வாங்கித்
    தண்மதி யம்மய லேததும்ப
வீழ்தரு கங்கை கரந்தார்
    வேட்கள நன்னக ராரே.
8
திருவொளி காணிய பேதுறு கின்ற
    திசைமுக னுந்திசை மேலளந்த
கருவரை யேந்திய மாலுங்
    கைதொழ நின்றது மல்லால்
அருவரை யொல்க எடுத்த வரக்கன்
    ஆடெழிற் றோள்களா ழத்தழுந்த
வெருவுற வூன்றி பெம்மான்
    வேட்கள நன்னக ராரே.
9
அத்தமண் டோய்துவ ராரமண் குண்டர்
    யாதுமல் லாவுரை யேயுரைத்துப்
பொய்த்தவம் பேசுவ தல்லால்
    புறனுரை யாதொன்றுங் கொள்ளேல்
முத்தன வெண்முறு வல்லுமை யஞ்ச
    மூரிவல் லானையின் ஈருரி போர்த்த
வித்தகர் வேத முதல்வர்
    வேட்கள நன்னக ராரே.
10
விண்ணியன் மாடம் விளங்கொளி வீதி
    வெண்கொடி யெங்கும் விரிந்திலங்க
நண்ணிய சீர்வளர் காழி
    நற்றமிழ் ஞானசம் பந்தன்
பெண்ணின்நல் லாளொரு பாகம மர்ந்து
    பேணிய வேட்கள மேல்மொழிந்த
பண்ணியல் பாடல் வல்லார்கள்
    பழியொடு பாவமி லாரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com